''வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்க தெற்கில் ஒரு குழு சூழ்ச்சி .." புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தகவல்

வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்கவே தெற்கில் ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில் 'நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் உரையாற்யாற்றிய ஜனாதிபதி


வடக்கிலும்,தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்றும் பிரதான வழியாக இனவாதம் காணப்பட்டது.
இந்நிலைமையை தான் மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தோற்கடித்தார்கள்.

இனவாதிகள் தாம் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்தை பரப்ப முயற்சிக்கிறார்கள்.திணறுகிறார்கள்.

இனவாத அரசியல்வாதிகள் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவையாற்றமாட்டார்கள்.

தோல்வியடைந்த சக்திகள் மீண்டும் தலைதூக்க இனவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகின்றன.

இந்த நாட்டில் இனவாதத்துக்கு இனி இடமில்லை.நாட்டு மக்களும் இனவாதத்தை புறக்கணிக்க வேண்டும்.
வடக்கு தொடர்பில் தெற்கில் ஒரு தரப்பினர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள்.

யுத்தம் பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கொழும்பில் ஆயுதம் கைப்பற்றல், துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை சாதாரணமாக பார்க்கிறவர்கள்,வடக்கில் அவ்வாறு இடம்பெற்றால் அது யுத்தத்துக்கான அறிகுறி என்று குறிப்பிடுகிறார்கள்.
வடக்கில் என்றும் யுத்தம் என்ற அச்சத்தை ஏற்படுத்தவே ஒருசில அரசியல் தரப்பினர் தெற்கில் உள்ளார்கள்.
வடக்கு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்.

வடக்கில் இனி யுத்தம் என்பதொன்று தோற்றம் பெறாது என்ற நிலையில் இருந்துக்கொண்டு செயற்படுகிறோம்.அதுவே எமது பிரதான இலக்கு.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு சர்ச்சைக்குரிய வகையில் தீர்மானங்களை எடுப்பதற்கும் பின்வாங்க போவதில்லை.

பழைய இனவாத கோசங்களுக்கு எதிரான செயற்பாடுகளை மீளப்பெற போவதில்லை.
தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு.

காணி உரிமை மற்றும் தமது இடங்களில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. முற்போக்கான தீர்மானங்களை எடுக்கும் போது இனவாதிகள் கோசமிடுவார்கள். அந்த கோசங்கள் வெற்றிப்பெற இடமளிக்க போவதில்லை என்றார்.